சென்னை:
கோடம்பாக்கத்தில் உள்ள திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளேடு அலுவலகத்தில் கருணாநிதி சிலைதிறப்பு விழா ஆகஸ்டு 7ந்தேதி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியின் சிலை கடந்த ஆண்டு (2018) டிசம்பர் 16ந்தேதி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியால் திமுகவின் தலைமையகமான சென்னை அறிவாலயத்தில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிலையில், கருணாநிதி ஆசிரியராக இருந்த முரசொலி நாளிதழ் வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை கலைஞர் நினைவு நாளான ஆகஸ்டு 7ந்தேதி திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவில் கலந்துகொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் மேலும் பல தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.