சென்னை: “கலைஞரின் மனசாட்சி” என அழைக்கப்படும் மறைந்த முரசொலி மாறன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91-வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அவரது உருவரை சிலை அமைந்துள்ள கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறனின் திருவுருவ எ சிலைக்கு முதலமைச்சர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தலைவர் கலைஞரின் மனசாட்சி” ஆகவும், டெல்லியில் கழகத்தின் முகமாகவும், பின்னாளில் உலக அரங்கில் இந்தியா மட்டுமல்லாது அனைத்து வளரும் நாடுகளின் குரலாகவும் மிளிர்ந்த முரசொலி மாறன் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் இன்று! “ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?”, ” திராவிட இயக்க வரலாறு”, “மாநில சுயாட்சி” என அவர் படைத்தளித்த ஆக்கங்கள் கழகத்தின் அறிவுப் புதையலாகத் திகழ்கின்றன. இறுதிவரை கொள்கை முரசமென ஒலித்த முரசொலி மாறனின் திராவிட இயக்கப் பயணத்தை இன்றைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று அவருக்கு நன்றி செலுத்துவோம்! என குறிப்பிட்டுள்ளார்.