சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, வரும் 7-ம் தேதி சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்று திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தன் காலம் கடந்தும் போற்றப்படும் #SocialJustice நகர்வுகளால் இலட்சக்கணக்கானோரின் நெஞ்சங்களில் நாள்தோறும் நன்றியோடு நினைவுகூரப்படுகிறார் தலைவர் கலைஞர்! நிறைவாழ்வு வாழ்ந்த நீடுபுகழ் கலைஞரின் நினைவு நாளில் நன்றி செலுத்தக் கூடிடுவோம்!
இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், என்றும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலாம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-வது நினைவு நாள், ஆகஸ்ட் 7-ம் தேதி, ஆறாத வடுவாக நம் இதயத்தை கீறிக் கொண்டிருக்கிறது. அவர் ஒவ்வொரு பொழுதையும் தமிழ், தமிழர், தமிழ்நாடு மேன்மைக்காக அர்ப்பணித்து அயராது உழைத்த ஓய்வறியாத சூரியனாம் நம் உயிர்நிகர் கருணாநிதி, இப்போதும் நம் இதயத் துடிப்பாக இருக்கிறார்.
மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறைகளால் தமிழகத்துக்குரிய நிதியும், திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டாலும், நம்மை எந்நாளும் இயக்கும் நம் தலைவர் கருணாநிதியிடம் கற்றுக்கொண்ட அரசியல், நிர்வாகத் திறனால் தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி நல்லாட்சியை வழங்கி வருகிறது நமது அரசு.
திமுக அரசுக்கு எதிராக அரசியல் எதிரிகள் திட்டமிட்டுப் பரப்ப முயற்சிக்கும் அவதூறுகள் ஈசல் பூச்சிகளைப் போல உடனடியாக உயிரிழந்து விடுகின்றன. நம் நெஞ்சத்தில் நிறைந்து வாழும் தலைவர் கருணாநிதியின் நினைவினைப் போற்றும் வகையில், வரும் 7-ம் தேதி சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்.
எதையும் தாங்கும் இதயம் கொண்ட தன் அண்ணன் அருகில் ஓய்வு கொள்ளும் ஓயாத உழைப் பாளியாம் கருணாநிதியின் நினைவிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் அமைதிப் பேரணி இது. ‘கலைஞர் உலகம்‘ எனும் அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் அமைந்துள்ள இடத்தை இந்தக் குறுகிய காலத்துக்குள் தமிழகத்திலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாகும்.
நம் தலைவருக்கு நாமும் நம் நன்றிக் காணிக்கையைச் செலுத்துவோம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களில் கருணாநிதி திருவுருவப் படத்துக்கு மாலையிட்டு மலர் தூவி நன்றியினை செலுத்துங்கள். கட்சியின் உடன்பிறப்புகள் அவரவர் வீடுகளில் தலைவர் கருணாநிதிக்கு நன்றியை செலுத்துங்கள். என்றென்றும் அவர் நம் உள்ளத்துக்கு தரும் உத்வேகத்துடன் நம் லட்சியப் பயணத்தைத் தொடர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.