சென்னை: ஆகஸ்டு 7ந்தேதி கருணாநிதியின் 5-ம்ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, திமுக தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முறை முதல்வராகவும், திமுகவின் தலைவராக 50 ஆண்டுகளுக்குமேல் இருந்த கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசன கர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் 5 முறை முதலமைச்சராக, உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், அண்ணாவோடு தி.மு.க.வில் தொடர்ந்து பணியாற்றி அவரது மறைவுக்கு பின்னர் தி.மு.க.வின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து,
தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கி கொண்டவர் கருணாநிதி. அவரின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் உள்பட கட்சியின் முன்னணியினர் கலந்துகொள்ளும் அமைதி பேரணி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்படும்.
பின்னர் மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், இந்நாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக செயலாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.வின் அனைத்து அணியினரும் கருணாநிதியின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.