சென்னை: காவல்துறை வாகனம் மோதி மாணவர்கள் இருவர் பலியானதற்கும், இதைக் கண்டித்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“சென்னை அயனாவரத்தில், பத்தாம் வகுப்புத் தேர்வில் தேறி, 11ஆம் வகுப்பில் சேர இருந்த மாணவர்கள் இரண்டு பேர் மீது காவல்துறையினரின் வேன் ஒன்று மோதியதால் உயிரிழந்திருக்கிறார்கள். மாணவர்கள் மீது காவல்துறையின் வாகனத்தை ஏற்றி விட்டு, அதிலே இருந்த காவல்துறையினர் ஓடி விட்டார்கள். விபத்தை ஏற்படுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி அந்தப் பகுதியிலே உள்ள பொதுமக்கள் சாலை மறியல் நடத்திய போது, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதில், 2 மூதாட்டிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாவதும், விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டால் காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்துவது கடுமையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.
கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் நடந்த விபத்தில் பலியானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். .பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.