சென்னை:
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று மு.க.அழகிரி, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று சென்னை வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக பாஜக கூட்டணிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய, பிரதமர் மோடி, அதிமுகவின் நீண்ட கால கோரிக்கையான, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
இதற்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும்,முன்னாள் திமுக தென்மண்டல பொறுப்பாள ரும், கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடி அடித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், அதே வேளையில், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி பெயர் சூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.