சென்னை:

மிழக அரசின் ரூ. 2000 சிறப்பு நிதி உதவி திட்டத்தை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அந்த திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய சென்னை உயர்நீதி மன்றம், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000  நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசாணையும் போடப்பட்டது.

தற்போது தமிழகம் முழுவதும் நிதி உதவி பெறுபவர்கள் குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். அதில், 2ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி திட்டம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்று சொன்னார்கள். ஆனால், அனைத்து தரப்பினருக்கும் வழங்குகிறார்கள் என்றும், அரசாணையிலும் திருத்தம் செய்து உள்ளனர், எனவே இந்த திட்டத்தை தடை செய்ய வேண்டும்  என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை,  நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. ஏற்கனவே விசாரணை  முடிவடைந்து விட்ட நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பில்,  பயனாளிகளை கண்டறிய அரசு சரியான நடைமுறையை  பின்பற்றி வருகிறது என்ற நீதிபதிகள்  ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு தடையில்லை என்று கூறி மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்தனர்.