சென்னை: தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் மறைந்த தமிழ்க முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்து உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் 100வது ஆண்டுவிழா மற்றும், முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திறப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருணாநிதி படம் மற்றும் சட்டமன்ற 100 விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
சுமார் ஒரு மணி நேரம் நடக்கவிருக்கும் இந்த விழாவில் பங்கேற்க சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி தலைமை செயலக வளாகம் கமாண்டோ படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வளாகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக சபாநாயகர் அப்பாவு டெல்லி சென்றிருந்தபோது, அங்கு செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்க தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அனைவருக்கும் கட்சி பாகுபாடின்றி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார். இதில் ரஜினி உள்பட திரையுலக பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவையில் நடக்கும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்திருக்கிறார். திமுக அரசு சட்டமன்ற வரலாற்றை மாற்றியமைத்து விழா கொண்டாடுகிறது என குற்றம் சாட்டி உள்ளார். மேலும், சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் எப்படி வரமுடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.