“தி.மு.க. தலைவர் கருணாநிதி, தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் வன்முறையைத் தூண்டுகிறார்” என்று இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற என்னவெல்லாமோ செய்து பார்த்து கடைசியில் தோல்வியை தழுவிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி அவர்கள், தினசரி எதிர்மறைக் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அவரது மன விரக்தியால், ஜனநாயக மாண்பை மதிக்காமல், மக்களை ஆடுகளாகவும், அந்த ஆடுகள் கசாப்புக்காரனைத்தான் நம்புகிறது எனவும் பேசினார்.
தற்போது தமிழக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி வன்முறை ஏற்படுத்தும் நோக்கில், நடுவணரசு பாடத்திட்டத்தில் மூன்றாவது விருப்பப்பாடமாக சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிப்பாடங்களை கொண்டு வர இருப்பதை மறைத்து, சம்ஸ்கிருதம் திணிக்கப்படுவதாகவும், அதனை விரட்டி அடிக்க, இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வன்முறை போராட்டம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள், தனது இறுதி காலத்திலாவது மக்களுக்கு நல்லது செய்வார் என நினைத்தவர்களை ஏமாற்றமடையச் செய்கிறது அவரது செயல்பாடு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக மக்கள் பெரும் இழப்பைத் தான் சந்தித்தார்கள். ஆனால், அதனைத் தூண்டிவிட்ட கருணாநிதியோ, தனது பேரனுக்கு இந்தித் தெரியும் என பெருமை பேசி, அவரை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
தமிழகத்தில் தமிழை அழித்த பெருமை இந்தத் திராவிட கட்சிகளையே சாரும். கான்வெண்ட் கலாச்சாரத்திற்கு அரசின் கஜானாவைத் திறந்துவிட்டது மட்டுமல்ல, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வந்ததும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒரு பெரும் பகுதியை உருது பள்ளியாக மாற்றி தமிழ் வழி கல்விக்கு மூடுவிழா நடத்தியதும் இதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் என்பதை தமிழகம் மறக்காது.
சட்டசபை தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் உருது மொழி கட்டாய பாடமாக்க அறிவிப்போம் என தெரிவித்திருந்தது, இவர்களது இரட்டை நிலைப்பாட்டிற்கு இது உதாரணமாகும். மேலும், திமுக தலைவர் குடும்பத்தினர் மற்றும் அவரது கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இரண்டாம் மொழியாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நவோதயா பள்ளிகளை மத்திய அரசு தமிழகத்தில் திறக்க எதிர்ப்புத் தெரிவித்தது திமுக ஆட்சி. தமிழகத்திற்கு வரவேண்டிய நவோதயா பள்ளிகளை பக்கத்து மாநிலங்கள் கேட்டு வாங்கிக்கொண்டன. இதனால் தமிழக மக்களுக்குத்தான் நஷ்டம். இந்த வருடம் நவோதயா பள்ளி மாணவர்களே இந்திய அளவில் முதன்மை பெற்றனர் என்பதை காணும்போது, இத்தகைய வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைக்காமல் செய்தது இந்த திராவிட கழக ஆட்சி.
மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.சி. பள்ளியில் மூன்றாவது விருப்ப மொழியாக இருக்கும் ஜெர்மன், பிரன்ச் போன்ற அயல்நாட்டு மொழிகளை பற்றி வாய்த்திறக்காத திமுகத் தலைவர், சம்ஸ்க்ருதத்தை விருப்பப்பாடமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது இவரது இந்து விரோத காழ்ப்புணர்ச்சியே காரணம்.
மக்களை வன்முறைக்குத் தூண்டும் இவரது பேச்சை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ் மொழி, தமிழ் வழி கல்விக்கே அரசின் நிதி உதவியோடு உடன் அங்கீகாரம் தரப்பட வேண்டும் என கோரிக்கை வைக்க இந்தத் திராவிட கட்சிகள் ஏன் குரல் கொடுப்பதில்லை. தமிழ் வாழ்ந்தால், சிறந்தால் மக்கள் நல்லவர்களாக வாழ்வார்கள், அப்போது இவர்களது கேவலமான அரசியல் தந்திரம் எடுபடாது .
இதனாலேயே தமிழை வளர்க்கவோ, தமிழ் வழி கல்வியை ஆதரிக்கவோ இவர்கள் முன்வருவதில்லை. ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நடத்தும் கான்வென்ட் படிப்புக்கு அரசின் பணத்தை வாரி கொடுக்கிறார்கள்.
இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள். ஒன்று திமுகத் தலைவர் கருணாநிதி தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் திமுகவில் இருக்கும் நடுநிலையாளர்கள், மற்றும் பொதுமக்கள் கருணாநிதி போன்ற தலைவர்களை தனிமைப்படுத்துவதோடு, திமுகத் தலைவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது”- இவ்வாறு தனது அறிக்கையில் இராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.