சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் 12.30 மணி அளவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் 12 தோழமை கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து களமிறங்கு கிறது. இந்த கூட்டணியில் திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் வீதம் 3 தொகுதிகள், பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. . இதன்மூலம் 173 தொகுதிகள் திமுக நேரடியாக களம்காண உள்ளது. கூட்டணி கட்சியினர் 13 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். உதயசூரியன் சின்னம் 187 இடங்களில் களம் காண்கிறது.
இதைத்தொடர்ந்து, இன்று திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று மதியம் 12.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினால் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பாக திமுக தலைவர் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில், திமுக வேட்பாளர் பட்டியலை வைத்து ஆசி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.