சென்னை:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வீட்டு வாசலில் கோலம் வரையப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திமுக, காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் திமுக தலைவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக மக்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
அதைத்தொடர்ந்து, திமுக மகளிர் அணியினர் தங்களது வீட்டு வாசலில், No CAA No NRC வாசகத்துடன் கோலம் போட வேண்டும் வேண்டும் என்று கனிமொழியும் தெரிவித்திருந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திமுக சார்பில் கோலம் வரைந்து இந்த சட்டத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. நேற்று ஏராளமான திமுகவினர் வீடுகளில் NO NRC , NO CAA என்ற வாசகங்களுடன் கோலம் போடப்பட்டிருந்தது. அதுபோல மகளிர் அணியினரும் தங்களது எதிர்ப்பை கோலங்கள் வரைந்து தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின், கனிமொழி வீடுகளில் கோலம்போடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் சிஐடி நகரில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் வீட்டு வாசலில் No CAA. No NRC என்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரையப்பட்டிருந்தது.