சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தலை கருணாநிதி வலியுறுத்தி உள்ளார் என்று பாஜக எம்எல்ஏ வானதி சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, “ஒரே நாடு ஒரே தேர்தலை கடுமையாக எதிர்க்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்திலிருந்து செல்லும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி செய்துள்ளனர். இதனை முறியடிக்க வேண்டும். இந்த இரண்டும் மக்களாட்சிக்கு எதிரானது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஒரே தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகளை முன்கூட்டியே கலைக்கும் சூழல் ஏற்படும். மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்ய முடியும். இதைவிட காமெடிக் கொள்கை வேறு இருக்காது. நாடாளுமன்ற தேர்தலைகூட ஒரே கட்டமாக நடத்த முடியாத சூழல் தான் உள்ளது. உள்ளாட்சிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில், அதற்கும் தேர்தல் நடத்தப்போவதாக கூறுவது மாநில உரிமைகளை பறிப்பதாகும் என கடுமையாக சாடினார்.
இதைத்தொடர்ந்து, இந்த தீர்மானங்கள் மீது அரசியல் கட்சியினர் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த தீர்மானங்கள் குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவான், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நிறைய கேள்விகள் எழத்தான் செய்யும். அதை ஆய்வு செய்யதான் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த தேர்தலிலேயே நிறைவேற்றப்போவதில்லை. அதற்கு மேலும் சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், சில உறுப்பினர்கள் தாங்களாகவே, தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
திமுக அரசின் தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறியவர், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, தனது நெஞ்சுக்கு நீதியில்,ஒரே நாடு, ஒரே தேர்தலை வலியுறுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.
1971ல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வேண்டும் என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். அதனை அவரது மகன் ஸ்டாலின் படிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.