கடந்த ஆண்டு தனது கொள்ளுப்பேரன் திருமண நிச்சயதார்த்த விழாவில் கருணாநிதி

சென்னை,

னது கொள்ளுப்பேரன் – நடிகர் விக்ரமின் மகள் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை தனது கோபாலபுரம் இல்லத்தில் நடத்தி வைத்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கடந்த வாரம் முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்நிலையில், தனது மகன் மு.க.முத்துவின் பேரன் மனுரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷதாவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை கருணாநிதி நடத்திவைத்தார்.

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதா – கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித் ஆகிய இருவரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு  ஜூலை மாதம் 10ந்தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கருணாநிதியின் உடல் நலம் தற்போது ஓரளவு தேறியுள்ள நிலையில், கடந்த   19-ம் தேதி கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் சென்று, அங்கு முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்த தனது கொள்ளுபேரனுடன் கருணாநிதி சிரித்து விளையாடும் காட்சிகள் வீடியோ பதிவு திமுக சார்பில் வெளியிடப்பட்டது.

கருணாநிதியுடன் மணமக்கள்

இந்நிலையில் இன்று  காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார். மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர். காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றனர்.

மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

திருமண விழாவில் மு.க.அழகிரி, காந்தி அழகிரி, செல்வி குடும்பத்தினர், மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, துர்கா ஸ்டாலின், தயாநிதிமாறன், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் அமிர்தம், முரசொலி செல்வம், கவிஞர் வைரமுத்து மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் கருணாநிதியை வீல்சேரில் வைத்து வாசலுக்கு அழைத்து வந்தனர். வெளியில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்களை பார்த்த பிறகு மீண்டும் உள்ளே அழைத்து சென்றனர்.

திருமண நிகழ்ச்சியையொட்டி கோபாலபுரம் இல்லம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒராண்டுக்கு பிறகு குடும்ப நிகழ்ச்சியில் கருணாநிதி பங்கேற்றதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கொள்ளுப்பேரன் திருமணத்தில் கருணாநிதியுடன் அழகிரி