சென்னை:
கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், அரசின் உத்தரவு சரிதான் என்றும் கூறி உள்ளது.
கார்த்தி சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வருமான வரி தொடர்பான வழக்கு, தற்போது அவர் சிவகங்கை எம்.பி.யாக உள்ளதால், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் , கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி சிதம்பரம் கட்டாயம் விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், அடுத்த விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் பிடியாணை (வாரண்டு) பிறப்பிக்கப்படும் என்றும் கடந்த ஜனவரி மாதம் 7ந்தேதி அன்று எச்சரிக்கை விடுத்தது.
இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதிஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சிறப்பு நீதி மன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
மேலும், கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தும், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு சிதம்பரம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.