சென்னை:  சென்னையில் குவியும் குப்பைகளை அகற்ற முடியாமல் சென்னை மாநகராசி திண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு காங்கிரஸ் எஎம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆலோசனை தெரிவித்து உள்ளார்.

சென்னையில் குவியும்  குப்பை அகற்றும் சவாலை சமாளிக்க, மாநகராட்சி அதிகாரிகள் ஐரோப்பா சென்று நவீன தொழில்நுட்பங்களை ஆய்வு செய்ய  இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ள நிலையில்,   இதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், இதுகுறித்து மத்தியபிரதேச மாநிலம்  இந்தூர் சென்று கற்றுக்கொள்ளுங்கள் என அறிவுரை  கூறி உள்ளார்.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் கழிவு மேலாண்மை குறித்து சென்னை மாநகராட்சி பாடம் கற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்  கூறியது  சிலரது  புருவங்களை உயர்த்தியது. கார்த்தி சிதம்பரம் பல நேரங்களில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தாலும், பாஜக ஆட்சியின்  சில நல்ல நடவடிக்கைகளை பாராட்டுவதிலும் தயக்கம் காட்டுவது இல்லை. அதுபோல காங்கிரஸ் கட்சியின் சில மக்கள் விரோத  நடவடிக்கைகளையும் நேரடியாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி குப்பைபளை அகற்றுவது குறித்து பயிற்சி எடுக்க வெளிநாடுகளுக்கு அதிகாரிகளை அனுப்ப இருப்பதை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

சென்னையில் குப்பைகளை அகற்றுவதிலும் அவற்றை அப்புறப்படுத்துவதிலும் சென்னை மாநகராட்சிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. அந்த வகையில் குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து அளித்தால், அந்த வேலையை ஓரளவுக்கு எளிதில் செய்து விடலாம். ஆனால் பலமுறை சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் சென்னை மக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதில்  ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், தெருவோரங்களில் இருந்த குப்பை தொட்டிகளை மாநகராட்சி அகற்றி விட்ட நிலையில், வீடுகளில் உள்ள குப்பை அள்ளுபவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் சென்று குப்பைகளை பெறுவது இல்லை. இதனால் பணிக்கு செல்லும் பெண்கள், குப்பைகளை கொட்டுவதில் கடுமையான சிரமங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அவர்கள் பணிக்கு செல்லும்போது குப்பைகளை சாலையோரத்திலோ, அல்லது எங்காவது வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டியிலோ வீசிவிட்டு செல்லும் நிலை உள்ளது.

இதனால், குவியும்  குப்பைகளை  அள்ளி, அதனை தரம் பிரித்து அதன் பின்பு அதனை அழிப்பது என்பதில் சென்னை மாநகராட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

கொடுங்கையூர் குப்பை கிடங்கு 342.91 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 252 ஏக்கர் பரப்பளவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் 34 லட்சம் கன மீட்டர் அளவில் பல்வேறு வகை குப்பைகள் இங்கு குவிக்கப்பட்டுள்ளன.

தென்சென்னை, மத்திய சென்னையின் ஒரு பகுதிகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பை கிடங்குக்கும், வடசென்னை மற்றும் மத்திய சென்னையல் சில பகுதிகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகள்  கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.  இதனால்,  அந்தப் பகுதி முழுவதும் மக்கள் வாழ முடியாத நிலையில், தொடர்ந்து சென்னை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம், சில நேரங்களில் மர்ம நபர்கள் குப்பை மேட்டில் வைக்கும் தீ காரணமாக வடசென்னை மக்கள் மற்றும் பெருங்குடி மக்கள் கடுமையான சுவாச பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும்,  மழை காலங்களில் அளவுக்கு அதிகமான துர்நாற்றம், கொசு தொல்லை என பல்வேறு இடர்பாடுகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இதனை தடுக்க தமழ்நாடு அரசு பல ஆண்டுகளாக  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குப்பைகளை அழிக்க எரி உலைகளை நிறுவன மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் முன்வந்துள்ளது. ஆனால், இதனால் வெளியாகும் புகை மேலும் பல நோய்களை உருவாக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அந்த பகுத மக்களும் எதிர்ப்பு தெரவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு அரசு,   சென்னை உள்பட மாநிலத்தில்  கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய நகரங்களில் உள்ள சுத்தமான தொழில்நுட்பங்கள், நவீன குப்பைக் கிடங்குகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஐரோப்பாவிற்கு  அனுப்ப முடிவு செய்துள்ளது.   இதற்கு உலக வங்கி ஆதரவு தெரிவித்துள்ளது.

உள்ளூர் குப்பை கிடங்குகள் தொடர்பான மக்களின்  எதிர்ப்புகளை தொடர்ந்து,  மாசுகளின்றி குப்பை மேலாண்மையை செயல்படுத்துவது தொடர்பாக பயிற்சி எடுக்க இருப்பதாக   சென்னை மாநகராட்சி கூறியிருந்தது.

சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு  காங்கிரஸ் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதற்கான தீர்வு நமது நாட்டிலேயே உள்ள நிலையில், வெளிநாடு சென்றுதான் பயிற்சி பெற வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளார்..

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “முந்தைய ஆய்வு சுற்றுப்பயணங்களிலிருந்து @chennaicorp கற்றுக்கொண்டு செயல்படுத்திய ஒரு நடைமுறையை நீங்கள் குறிப்பிட முடியுமா?. அதாவது, இதற்கு முன்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கழிவு மேலாண்மை அகற்றுவது தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று வந்ததில் இருந்து இந்த விஷயத்தில் கற்றுக் கொண்டது மற்றும் செயல்படுத்திய நடைமுறையை காட்ட முடியுமா? 

மோசமான குப்பை மேலாண்மை, தெரு நாய்கள் & கால்நடைகள், உடைந்த நடைபாதைகள் & குழிகள் நிறைந்த சாலைகள் ஆகியவை சென்னையின் தனிச்சிறப்புகளாக உள்ளன.    முதலில் இந்தூருக்குச் செல்லுங்கள்” என்று  பதிவிட்டுள்ளார்.

மொழிகள் முதல் எல்லை நிர்ணயம் வரையிலான பிரச்சினைகளில் மத்தியில் மோடி அரசாங்கத்துடன் மோதலில் திமுக அரசு ஈடுபட்டுள்ள நேரத்தில், நீண்டகாலமாக பாஜகவால் நடத்தப்படும் இந்தூர் நகராட்சி பாராட்டுகளைப் பெற்று வருவதை காங்கிரஸ் எம்.பி. சுட்டிக்காட்டி சென்னை மாநகராட்சிக்கு பாடம் எடுத்துள்ளது பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.