சென்னை: கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர்  தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது. முன்னதாக,  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்  கடந்த 17ந்தேதி  காலை கொடியேற்றப்பட்டது. இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழா வில் காலை மாலை என இரண்டு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும்.  மேலும், திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கார்த்திகை பவுர்ணமி அன்று. அதாவது நவம்பர் 26 ம் தேதி   கார்த்திகை தீபம்   ஏற்றப்படுகிறது. அன்று  அதிகாலை  4 மணிக்கு கோவிலில் கருவறையின் முன்பு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீபமலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த கார்த்திகை தீபத் திருவிழாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  கலந்துகொள்வார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவிற்காக வரும் ஆன்மீக பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காகவும் அடிப்படை வசதிகளுக்காகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கோவில் நிர்வாகம் என பல்வேறு துறையினர் செய்துள்ளனர்.

இந்த நிலையில், கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து  இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், தமிழ்நாடு போக்குவரத்துதுறை 2,700 வழக்கமான மற்றும் சிறப்பு பேருந்துகளை 3 நாட்கள் இயக்க உள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை முதல் திங்கள்கிழமை வரை இயக்கப்பட உள்ளது. 7,000 முறை இந்த பேருந்துகள் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று, திரும்பும். இந்நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கும் திட்டத்தில், புதிதாக 9 தற்காலிக பேருந்து நிறுத்தம் வழித்தடத்தில் உருவாக்க உள்ளனர். அண்ணா ஆர்ட்ச் வேலூர் சாலை, அவலூர்பேட்டை சாலை, திண்டிவனம் சாலை, வேட்டவலம் சாலை. திருக்கோயிலூர் சாலை, மணலூர்ப்பேட்டை சாலை, செந்தமிழன் நகர், சென்கம் மற்றும் காஞ்சி சாலை உள்ளிட்ட 9 தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்பட உள்ளது.

மேலும் கோவிலுக்கு செல்ல வசதியாக 40 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளில் மக்கள் கோவில் வரை செல்லலாம். இதற்கு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.