டில்லி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் இன்று எல்லையில் கையெழுத்தானது.
பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்பூர் சாகிப் குருத்வாராவில் சீக்கிய மத நிறுவனர் குருநானக் நினைவிடம் அமைந்துள்ளது. சீக்கிய மக்கள் பலரும் இந்த குருத்வாராவுக்கு சென்று வழிபட விரும்பி அனுமதி கோரினர். அதையொட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது.
இரு நாடுகளும் அவரவர் நாட்டில் உள்ள சாலைப்பணிகளை முழுவதுமாக முடித்துள்ளனர். வரும் 12 ஆம் தேதியன்று குருநானக் 550 ஆம் பிறந்த தினத்தையொட்டி இந்த பாதை திறக்கப்பட உள்ளது. இந்த பாதையின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இருநாடுகளும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரித்தன
இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கையெழுத்தாகவில்லை.
இன்று எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் சந்தித்து கையெழுத்து இட்டுள்ளனர். காஷ்மீரில் விதி எண் 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வரும் வேளையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கதாகும்.