பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சர் ஸ்ரீராமலுவிடம் இருந்த மருத்துவக் கல்வியானது, அமைச்சர் சுதாகரிடம் ஒப்படைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இப்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந் நிலையில் கர்நாடகாவில், பாஜக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை அமைச்சரான ஸ்ரீராமுலுவுக்கு கூடுதல் அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை மாநில ஆளுநர் வஜூபாஸ்வாலா வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
ஸ்ரீராமுலுவிடம் இதுவரை இருந்த சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர் வகித்திருந்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தில் இருந்து மருத்துவ கல்வியும், கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து பொறுப்புகளும் அமைச்சர் சுதாகரிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராமுலு அந்த மாநிலத்தில் அவ்வப்பொழுது சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சராவார். அண்மையில் தமது மகளுக்கு 500 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி உள்ளார். இந்த திருமணம் பற்றிய செய்திகள் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. இவரது சகோதரர் ஜனார்த்தன ரெட்டி. அவர் தமது மகளுக்கு 2016ம் ஆண்டு 650 கோடி ரூபாயில் திருமணம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]