புதுடெல்லி:

லஷ்மிபாயை களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ள கங்கானா ராவுத் நடித்த ‘மணிகார்னிகா’  திரைப்படத்தை திரையிடும் தியேட்டர்களை சேதப்படுத்துவோம் என இந்து அமைப்பான கார்னி சேவா எச்சரித்துள்ளது.


பத்மாவதி திரைப்படம் கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையில் சிக்கியது. இந்தியாவின் பல இடங்களில் இத்திரைப்படம் திரையிட முடியாமல் போனது.

இந்நிலையில், கங்கானா ராவுத் நடித்த ‘மணிகார்னிகா’  ( ஜான்ஸியின் ராணி) திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படமும் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்தப் படத்தை திரையிட எதிர்ப்புத் தெரிவித்து கார்னி சேனா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் செகாவத் கூறும்போது, ” நமது பண்பாட்டுக்கு எதிரான வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அதிகாரிக்கும் லஷ்மி பாய்க்கும் உறவு இருப்பது போல் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ராணி நடனமாடும் காட்சியும் நமது பண்பாட்டுக்கு எதிரானதாக உள்ளது. வேண்டுமென்றே சில காட்சிகளை திரித்து எடுத்துள்ளனர்.

இந்த முட்டாள் தனத்தை சகித்துக் கொண்டிருக்க முடியாது. இந்த படத்தை எங்களுக்கு திரையிட்டுக் காட்டுமாறு தயாரிப்பாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
எங்களுக்கு திரையிட்டுக் காட்டாமல் படத்தை வெளியிட்டால், திரையரங்குகளை சேதப்படுத்துவோம். இந்த படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் சான்று கொடுத்திருப்பது பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை” என்றார்.

‘மணிகார்னிகா’  திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, ” அவர்கள் கூறுவது போல் லஷ்மிபாய் உறவு குறித்து ஏதும் காட்டப்படவில்லை. படம் திரைக்கு வந்ததும் தெளிவாகிவிடும்.

கடந்த 1857-ல் வலிமையுடனும் வீரத்துடன் சுதந்திரத்துக்காக ராணி லஷ்மிபாய் போராடியதை இந்த படத்தில் காட்டியுள்ளோம். இந்த படத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகின்றோம். எல்லா வயதினரையும் கவர்வதாக இத்திரைப்படம் இருக்கும்” என்றனர்.