பெங்களூரு

சுவதை மற்றும் மாட்டுக்கறி தடை குறித்து சட்டங்கள் இயற்ற கர்நாடக அரசு ஆலோசனை செய்ய உள்ளது.

முந்தைய ஆட்சியின் போது கர்நாடக பாஜக கடந்த 2010 ஆம் வருடம் பசுவதைத் தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதாவைச் சமர்ப்பித்தது.  நீண்ட நெடும் விவாதத்துக்குப் பிறகு அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  இந்த மசோதாவை அப்போதைய எதிர்க்கட்சி  தலைவரான சித்தராமையா கடுமையானது, அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் மதச்சார்பின்மைக்கு விரோதமானது எனக் கூறி மசோதா நகலைச் சட்டப்பேரவையில் வீசி எறிந்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டும் அப்போதைய ஆளுநர் பரத்வாஜ் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.  அந்த மசோதாவில் பசுவதை, மாமிசத்துக்காக மாடுகள் விற்பனை செய்வது, மாட்டுக்கறி வைத்திருப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் குற்றம் எனவும் அவ்வாறு செய்பவர்களுக்கு ஒரு வருடம் முதல்  7 வருடச் சிறைத் தண்டனை மற்றும் ரூ.25000 – ரூ.50000 அபராதம் வித்க்க்கபடும் எனக் கூறப்பட்டிருந்தது.

கடந்த 2013 ஆம் வருடம் சித்தராமையா தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசு பாஜகவின் இந்த மசோதாவைச் சட்டப்பேரவையில் இருந்து திரும்பப் பெற்றது.  சமீபத்தில் மஜத – காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததையொட்டி பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.   கர்நாடக பாஜகவின் பசுப்பாதுகாப்புப் பிரிவு நேற்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ஒரு மனுவை அளித்துள்ளது.  அந்தமனுவில் கடந்த 2010 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டுத் திரும்பப் பெறப்பட்ட மசோதாவை மீண்டும் அளிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக அமைச்சர் சி டி ரவி, “அரசு இந்த மனு குறித்து விரைவில் ஆய்வு செய்ய உள்ளது.   அதன் பிறகு இந்த மசோதாவை மீண்டும் அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.  தற்போதைய நிலையில் எந்த முடிவும் எடுக்கவில்லை.   பாஜக ஆட்சியில் இருந்தாலும் இந்த மசோதாவை  நிறைவேற்றும் அளவுக்குச் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் இல்லை என்பதால் உடனடியாக அளிக்க இயலாத நிலை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.