டில்லி

முனைவர் பட்டம் பெறாமலே முனைவர் எனப் பெயரின் முன்பு போட்டுக்கொண்டதாக  பாஜக அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

பாஜக அமைச்சர்களின் பட்டப்படிப்பு குறித்து சர்ச்சைகள் தொடர்ந்துள்ளன.   பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த சர்ச்சைகள் வெகு நாட்களாகச் சரியான விடை காணப்படாமல் உள்ளன.   அடுத்ததாக முன்னாள் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் பட்டப்படிப்பு குறித்த சர்ச்சைகள் எழுந்தன   முன்னாள் மனித வள அமைச்சர் குறித்த சர்ச்சைகளைத் தொடர்ந்து இன்னாள் மனித வள அமைச்சரின் பட்டப்படிப்பு குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.

கடந்த 2019 ஆம் வருடம் மே மாதம் 30 ஆம் தேதி அன்று மனித வள அமைச்சராக ரமேஷ் போக்ரியால் பதவி ஏற்றார்.   அப்போது அவர் பெயரின் முன்பு முனைவர் (டாக்டர்) என பட்டம் இருந்தது.    சாதாரணமாக பட்ட மேற்படிப்பு படித்து ஆராய்ச்சி படிப்பான பிஎச்டி முடித்தவர்கள் மட்டுமே முனைவர் என பட்டம் இட முடியும்.

அதே நேரத்தில் கவுரவ முனைவர் பட்டம் அளிப்பதும் உண்டு அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பெயரின் முன்பு டாக்டர் எனப் போடுவது வழக்கமில்லை.  எனவே அமைச்சரின் கல்வித் தகுதி குறித்து மனிஷ் வர்மா என்னும் ஆர்வலர் கேள்வி எழுப்பி உள்ளார் .   அதற்கு அவருக்கு இலங்கை பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ முனைவர் பட்டம் அளித்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் அமைச்சரின் காரியதரிசி பசவா புருஷோத்தம் என்னும் ஐ ஏ எஸ் அதிகாரி  அளித்த பதிலில் அமைச்சர் இரு கவுரவ முனைவர் விருதைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  அவற்றில்  ஒன்று கிராபிக் எரா பல்கலைக்கழகத்தில் இருந்தும். மற்றொன்று உத்தரகாண்ட் சமஸ்கிருத வித்யாலாவில் இருந்தும் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புருஷோத்தம், “அமைச்சர் போக்ரியால் தனது பட்ட மேற்படிப்பை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள எச் என் பகுகுணா பல்கலைக் கழகத்தில் முடித்து பட்டம் பெற்றுள்ளார். மனிஷ் வர்மா  அமைச்சரின் நற்பெயரைக் கெடுக்க இவ்வாறு புகார் அளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.   ஆனால் அவர் அமைச்சரின் இளங்கலை பட்டப்படிப்பு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.