பெங்களூரு: அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக, கர்நாடகாவின் கனகபுரா தொகுதியில் ஜூலை 1 வரை சுயமுடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கனகபுரா எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் தலைமையில் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கனகாபுரா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்த கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில் சிவகுமாரின் சகோதரரும், எம்பியுமான டிகே சுரேஷ், எம்.எல்.சி ரவி, துணை ஆணையர் அர்ச்சனா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அனூப் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கனகபுராவில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இது அரசாங்க உத்தரவு அல்ல, ஆனால் கனகபுரா அதிகாரிகள் எங்கள் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இதை தானே முடிவு செய்துள்ளனர் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ராமநகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருப்பவர்களுக்கும் உணவு செலவுகளுக்காக அரசு ஒருவருக்கு ரூ .60 வழங்குவதாக சிவகுமார் மேலும் தெரிவித்தார்.
இது போதுமானதாக இருக்காது, எனவே எங்கள் மக்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதற்கு மேல் ரூ .100 தருகிறேன் என்று சிவகுமார் கூறினார். இந்த லாக்டவுனால் பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
10ம் வகுப்பு வாரிய தேர்வுகள் வியாழக்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்க உள்ளன. நாங்கள் மாநிலத்தில் மாணவர்களுக்கு முகமூடிகளை விநியோகிப்போம். இந்த நோக்கத்திற்காக 1 லட்சம் முகமூடிகளை நாங்கள் தயார் செய்துள்ளோம் என்று சிவகுமார் கூறினார்.
மளிகை, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை விற்கும் வியாபாரிகள் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை தங்கள் கடைகளை திறந்து வைத்திருப்பார்கள். மருத்துவ கடைகள் மற்றும் ஒயின் கடைகள் திறந்த நிலையில் இருக்க வேண்டிய நேரம் குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்.