பெங்களூரு:

தாதா கும்பல் தலைவன் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் சிறையில் கர்நாடகா அரசு இ.கோர்ட் அமைத்துள்ளது.

ஹிண்டால்கா மத்திய சிறையில் முதன் முதலாக இ.கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாதா கும்பலை சேர்ந்த பனான்ஜி ராஜா மற்றும் இவரது 10 கூட்டாளிகள் அங்கோலாவில் ஒரு தொழிலதிபரான நாயக் என்பவரை 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக தான் தற்போது இ.கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. பல நீதிமன்றங்களில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருந்து பனான்ஜி ராஜா தப்பிச் செல்ல திட்டமிட்டிருக்கும் தகவலை கிடைத்ததை தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெலாகவி நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கைதிகளுடன் வழ க்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெலாகவி நீதிமன்றம் அருகே உள்ள ஒரு விடுதியில் இருந்து 6 குறிபார்த்து சுடும் திறன் கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் ஹிண்டால்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு தாதா கும்பலை சேர்ந்த தினேஷ் ஷெட்டியை சிறையில் இருந்து தப்பிக்க செய்வதற்காக இவர்கள் முகாமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும், தொடர் விசாரணையில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் துப்பாக்கியால் சுட்டு தப்பிச் செல்லும் வகையில் போடப்பட்டிருந்த திட்டம் அம்பலமானது. இதையடுத்து தான் இ.கோர்ட் அமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டதாக சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.