பெங்களூரு
தலித் மாணவர்கள் தங்க கட்டப்பட்ட விடுதி தற்போது கர்நாடக மாநிலத்தின் சட்ட விரோத குடியேறிகளுக்கான முதல் முகாமாக மாற்றப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தங்க முகாம்கள் அமைக்க வேண்டும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி அந்த முகாம் ஒரு சிறைச்சாலைக்குள் அமைந்திருக்கக் கூடாது மற்றும் அங்குத் தடையில்லா மின்சாரம், குடிநீர், படுக்கைகள், தேவையான அளவு குளியல் மற்றும் கழிப்பறைகள் இருக்க வேண்டும். அத்துடன் அங்கு உணவு, கழிவுநீர் இணைப்பு, மற்றும் ஆண் பெண் தங்க தனித்தனி இடங்கள் அமைந்திருந்த வேண்டும்.
அவ்வகையில் பெங்களூரு நகரில் இருந்து 40 கிமீ தூரத்தில் உள்ள நலமங்களா தாலுகாவில் உள்ள சொண்டகொப்பா கிராமத்தில் உள்ள ஒரு தலித் மாணவர் விடுதி இம்மாநிலத்தின் முதல் முகாமாக உள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கக் கட்டப்பட்டது.
இந்த விடுதி அமைக்கப்பட்ட போது இங்குள்ள மக்கள் விடுதியினால் ஊர் முன்னேற்றம் காணும் என நம்பினார்கள். ஆனால் இந்தப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததால் மாணவர்கள் இந்த பள்ளியில் சேரவில்லை. ஆகையால் இந்த விடுதியின் மாணவர் எண்ணிக்கை சிறிது சிறிதாகக் குறைந்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் இது மூடப்பட்டது.
இந்த விடுதியில் சுமார் 30 பேர் வரை தங்க முடியும். இந்த கட்டிடத்தைச் சுற்றி 10 அடி உயரச் சுற்றுச் சுவர் மற்றும் சுவருக்கு மேல் முள் கம்பியாலான வேலி உள்ளது. இதில் 5 இந்தியக் கழிப்பறைகள், ஐந்து சிறுநீர் கழிக்குமிடம், ஹீட்டர் வசதியுடன் கூடிய நான்கு குளியல் அறைகள், உள்ளன. அதைத் தவிர அதிகாரிகளுக்கான அலுவலகம் மற்றும் தங்குமிடம் உள்ளன.
கட்டிடத்தில் சூரிய ஒளி விளக்குகள், ஆழ்துளைக் குழாய்க் கிணறு, 2000 லிட்டர் தண்ணீர் தொட்டி, யூபிஎஸ் ஆகியவை ஏற்கனவே உள்ளன. இந்த விடுதியில் ஏற்கனவே வார்டனாக இருந்த விஜயகுமார் இந்த முகாமின் அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார். கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 சட்டவிரோதமாகக் குடியேறிய வங்க தேசத்தவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்களை இங்கு அடைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.