கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

Must read

 
பெங்களூரு:
காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நாளை  பிலிகுண்டு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1krs dam
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி கர்நாடகா தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது
.இதையடுத்து நடுவர் மன்ற தீர்ப்பு படி காவிரியில் 50 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு  வழக்கு தாக்கல் செய்தது. இதை  விசாரித்த சுப்ரீம் கோர்ட் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்திற்கு 10 நாட்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு  கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது. இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
1damஇதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக,  காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவாதிக்க முதல்வர் சித்தாராமையா தலைமையில்  அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் மத்தியஅமைச்சர்  அனந்தகுமார், மாநில நீர்பாசனத்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் உள்பட பல மந்திரிகள், எதிர்கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமுல்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்து வக்கீல்கள் விவரமாக எடுத்து கூறினர். மேலும் தண்ணீரை திறக்காவிட்டால் உண்டாகும் சட்ட சிக்கல்கள் குறித்தும் தண்ணீரை திறந்து விட்டால் அடுத்த கட்ட சட்ட போராட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர்கள் விவரமாக விளக்கினர்.
கூட்டம் முடிந்ததும் கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல கர்நாடக விவசாயிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும். மேலும் பொது மக்களுக்கு தேவையான குடிநீரும் வழங்கப்படும் என்றார்.
1cauvery-698-06-1473129909
சுப்ரீம் கோர்ட் உத்தரவை நாங்கள் மீற முடியாது. அந்த உத்தரவை பின்பற்றியே ஆக வேண்டும், அதே நேரத்தில் எதிர்கட்சிகள் ஆலோசனைப் படி உடனடியாக காவிரி மேற்பார்வை குழுவை அணுகவும் தீர்மானித்து உள்ளோம் என்றார்.
இதையடுத்து கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு உத்தரவிட்டது.அதன்படி நேற்றிரவு 12.30 மணிக்கு மைசூர் மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகா பீச்சன ஹள்ளியில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், மாண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் என மொத்தம் 15 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடி வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 3935 கன அடியாகவும், நீர்மட்டம் 75.83 அடியாகவும் இருந்தது. இன்று நீர் வரத்து மேலும் சரிந்து 3276 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 76 அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து 1250 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் ஒகேனக்கலுக்கு நாளை காலையிலும், மேட்டூர் அணைக்கு நாளை பிற்பகலிலும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் நாளை மேட்டூர் அணைக்கு வர உள்ளதால் அதன் பிறகு அணையின் நீர் மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
அணையின் நீர் மட்டம் 90 அடியை எட்டும் பட்சத்தில் வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.அதன்படி விரைவில் 90 அடியை எட்டும் நிலையில் அணையின் நீர் மட்டம் உள்ளதால் டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More articles

Latest article