டெல்லி: கர்நாடக மாநில  நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த உமேஷ் கட்டி (61) மாரடைப்பால் இன்று காலமானார்.  அவரது மறைவுக்கு பிரதமல்ர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

கர்நாடக பாஜக அரசின் வனத்துறை அமைச்சராக இருந்தவர் உமேஷ் கட்டி. 61வயதாகும் இவர் நேற்று பெங்களூருவில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, இரவு குளியல் அறைக்கு சென்றவர், வெகுநேரமாகியும் வெளியே வராததால்,   சந்தேகமடைந்த பணியாளர்கள் கதவை திறந்து பார்த்தபோது அமைச்சர் உமேஷ் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

அவரை உடனடியாக மீட்ட குடும்பத்தினர் இரவோடு இரவாக  தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மூத்த அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பாஜக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உயிரிழந்த அமைச்சரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உமேஷ் கட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர்,  பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநிலம் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியை, ஆற்றல்மிக்க தலைவரை, விசுவாசமான பொது ஊழியரை இழந்துவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார்.  அவரது உடல் பாகேவாடி பெலகாவி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்களுகள் நடைபெறும் என்றும், பின்னர் முழு அரசு மரியாதையுடன் உமேஷ் கட்டியின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  “உமேஷ் கட்டி ஒரு அனுபவம் வாய்ந்த தலைவராக இருந்தார், அவர் கர்நாடகாவின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவரது மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.

உமேஷ் கட்டியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெலகாவி மாவட்டத்தில் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.