பெங்களூர்:
கர்நாடக வனத்துறை அமைச்சர் பி.எஸ். ஆனந்த் சிங்குக்க கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், தற்போதைய நிலையில், 58, 425 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,141 ஆக உயர்நதுள்ளது.. இதுவரை 35, 838 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 1878 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட , கர்நாடக மாநில வனத்துறை அமைச்சரும், பல்லாரி தொகுதி பொறுப்பாளருமான பி.எஸ். ஆனந்த் சிங் நேற்று கொரோனா சோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு நோய்த் தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அமைச்சர் ஆனந்த் சிங் ஹொசப்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில் அவர் கொரோனா தடுப்பு மருத்துவமனையை பார்வையிடச் சென்றபோது பாதுகாப்பு உடை அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே கொரோனா சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.