பெங்களூரு
பாலியல் புகார் காரணமாக பணி இழந்த ஐ ஐ எஸ்சி பேராசிரியரை மீண்டும் பணியில் அமர்த்த கர்நாடக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சன்ஸ் எனப்படும் ஐ ஐ எஸ் சி யில் பேராசிரியராக பணி புரிந்தவர் கிரிதர். இவர் கெமிகல் எஞ்சினியரிங் பிரிவில் பணி புரிந்து வந்தார். இவரிடம் பி எச் டி கல்வி பயின்ற மாணவி ஒருவர் கடந்த 2017 ஆம் வருடம் மார்ச் மாதம் வேறொரு பேராசிரியரிடம் தன்னை மாற்றும் ப்டி கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.
அதன் பிறகு அந்த மாணவி கிரிதர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அகால வேளைகளில் தொலைபேசியில் அழைத்தும் குறும் தகவல்கள் அனுப்பியும் தனக்கு தொல்லை தருவதாக புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த கல்லூரியின் இயக்குனர் கிரிதரை கட்டாய ஓய்வில் பணியில் இருந்து அனுப்பி வைத்தார்.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கிரிதர் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது வழக்கு மனுவில் இயக்குனர் தனது தொலைபேசியையோ மற்றும் குற்றம் சாட்டிய பெண்ணின் தொலைபேசியையோ தகவல் மற்றும் அழைப்பு குறித்து ஆய்வு செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த மாணவி இயக்குனருக்கு அளித்த செய்தியில் இயக்குனரின் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்திருந்ததையும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை நீதிபதி தேவதாஸ் விசாரணை செய்து தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில், “மாணவி முதலில் தன்னை வேறு பேராசிரியரிடம் மாற்ற கோரிக்கை விடுத்த போது பாலியல் சீண்டல் குறித்து கூறவில்லை. மாறாக கிரிதர் தன் மேல் அக்கறை செலுத்துவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் கிரிதர் கூறியபடி இந்த விசாரணையில் பல முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி பத்திரிகையாளர் சந்திப்பில் கிரிதரின் பெயரைக் கூறி இந்த விசாரணை குறித்து இயக்குனர் தெரிவித்ததால் அவர் பழி வாங்கும் நோக்கத்துடன் விசாரணையை நடத்தி இருக்கலாம் என தோன்றுகிறது.
எனவே இயக்குநர் கிரிதருக்கு அளித்த கட்டாய ஓய்வு உத்தரவை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது. அத்துடன் கிரிதரை உடனடியாக பணியில் இணைக்க வேண்டும் என உத்தரவிடுகிறேன்.” என குறிப்பிட்ப்பட்டுள்ளது.