பெங்களூரு
பெலகாவி நகரில் நடந்த அமித்ஷா பேரணியில் கொரோனா விதிகள் மீறல் வழக்குப் பதியாத காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் ஒரு மாபெரும் பேரணி நடந்தது. இந்த பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னின்று நடத்தினார். இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமலும் சமுக இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்துள்ளனர்.
இதையொட்டி மார்ச் 12 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம் ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ எஸ் ஓகா மற்றும் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் பேரணி குறித்த விவரங்களாக பெலகாவி காவல்துறை ஆணையர் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அது குறித்து அமர்வு, “”காவல்துறை ஆணையர் அளித்த பிரமாண பத்திரத்தின் மூலம் கர்நாடகா தொற்றுநோய் தடுப்பு விதிகள் இந்த பேரணியில் மீறப்பட்டது தெளிவாகி உள்ளது. இந்த பேரணியில் விதி மீறல் செய்ததாக ஒருவர் மீது கூட வழக்குப் பதியவில்லை. ஒருவேளை இப்படி ஒரு விதி இருப்பது குறித்தே ஆணையருக்கு தெரியாது எனத் தோன்றுகிறது. மொத்தத்தில் ஆணையர் இந்த விதிமீறல்களைச் சகஜமாக எடுத்துக் கொண்டதாகவே தெரிகிறது.
பெளகாவியில் விதிகளை மீறி ஏராளமான கூட்டம் கூடியதும் அங்கு முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டதும் ஆணையருக்கு தவறாகத் தெரியவில்லை. ஆனால் அவர் அதற்கு அபராதம் வசூலித்தால் போதும் என எண்ணி உள்ளதாகப் பிரமாணப் பத்திரத்தின் மூலம் தெரிய வருகிறது., ஜூன் 3 ஆம் தேதிக்குள் இதற்கான விடைகளை அளிக்க வேண்டும் என ஆணையருக்கும் மாநில அரசுக்கும் உத்தரவு இடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.