பெங்களூரு:

100 சி.சி.க்கு குறைவான திறன் கொண்ட டூவீலர்களில் 2 பேர் பயணிப்பதை தடுக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை கர்நாடகா போக்குவரத்து துறை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக பெங்களூரு மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தகைய டூவீலர்களை தயாரிக்கும் நிறுவனம் வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமே பயணிக்கும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்த வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய வாகனங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதற்கான சுற்றறிக்கை அடுத்த ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடகா போக்குவரத்து துறை அமைச்சர் ரெவானா கூறுகையில், ‘‘ஒரு இளைஞர் சாலை விபத்தில் இறந்த வழக்கில் மாநில அரசின் விளக்கத்தை உயர்நீதிமன்றம் கோரியிருந்தது. இதை தொடர்ந்து அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 100 சி.சி.க்கு குறைவான திறன் கொண்ட டூவீலர்களின் பின்னால் அமர்ந்து செல்வதை தடுக்க மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

‘‘பெங்களூரு நகரில் ஓடும் 4 வாகனங்களில் ஒரு வாகனம் இந்த தகுதியின் கீழ் வருகிறது. இந்த கட்டுப்பாட்டை 50 சிசி.யாக குறைக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’’ என்று போக்குவரத்து துறை கமிஷனர் தயானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘100 சிசிக்கு குறைவான டூவீலர்களில் பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் தான் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து இதர மாநிலங்களில் பின்பற்றப்படும் விதிமுறைகளையும் ஆராய்ந்து மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். பல்வேறு காரணங்களுக்காக இந்த பரிந்துரை கடந்த காலங்களில் செய்யப்பட்டது’’ என்றார்.
ல்ல தடை