பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பில்லாத 9 மாவட்டங்களில், தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது எடியூரப்பா அரசு.
இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தொழிலாளர்கள் வேலைக்கு வர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் ஈடுபடவுள்ள தொழிலாளர்கள் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 40% இருக்கைகள் தான் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் உத்தரவுப்படி, யாத்கிர், ராய்ச்சூர், ஹவேரி, கோப்பல், சிவமோகா, சிக்மகளூரு, ஹசன், சாம்ராஜ்நகர் மற்றும் கோலார் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் செயல்பட சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்குவதுடன், கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதனால், தொழிற்சாலைகளை திறக்க சிறிது நாட்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசின் முடிவால், சிறு, குறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் பயனடைவர். யாத்கிர், கோப்பல், ராய்ச்சூர் மாவட்டங்களில் ஏராளமான அரிசி மற்றும் ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. கோலார் மாவட்டத்தில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.
இவற்றில், 10,000 பேர் பணிபுரிகின்றனர். இதேமாவட்டத்தில், மாநில அரசின் பிஇஎம்எல் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு 4000 பேர் பணியாற்றுகின்றனர்.