பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன்  பொதுஇடங்களில் 4அடி உயர வரையிலான சிலையுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அம்மாநிலஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் வரும் 10ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால், விநாயகர் சிலை வடிவமைப்பாளர்கள் ஏராளமான சிலைகளை வடிவமைத்து உள்ளனர். இதற்கிடையில், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலை வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விநாயகர் சிலை உருவாக்கியவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் நிபந்தனைகளுடன் விநாயக சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  வீடுகளில் 2 அடிக்கும் மிகாமலும், பொது இடங்களில் 4 அடிக்கும் மிகாமலும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விழாவில அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், இரவு 9 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன்,  கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன், விழா நடத்துபவர் கொரோனா தடுப்பூசி அல்லது பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும், விநாயகர் சிலை வைத்து வழிபட முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.