பெங்களூரு

கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் கர்நாடக அரசு ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் கர்நாடக மாநிலம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.  அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள கர்நாடகாவில் இதுவரை 26.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 30,531 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 23.36 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 1.84 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அதன் பிறகு 2 முறை நீட்டிக்கப்பட்டு ஜூன் 7 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.  கொரோனா தொற்று ஓரளவு குறைந்தாலும் தினசரி  பாதிப்பு 5000க்கும் கீழே சென்றால் மட்டுமே ஊரடங்கை தளர்த்த வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரை செய்தது.

எனவே கர்நாடகாவில் இதே கட்டுப்பாடுகளுடன் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  அவருடைய டிவிட்டரில், “கர்நாடகாவில் இம்மாத இறுதிக்குள் 60 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. வரும் 30-ம் தேதிக்குள் 2 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு விடும்.’’ எனப் பதிவிட்டுள்ளார்.