இட ஒதுக்கீட்டை 50%க்கு மேல் அதிகரிக்க கர்நாடக அரசு முடிவு

Must read

பெங்களூரு

வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்கான இட ஒதுக்கீட்டை 50% க்கு மேல் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி பல்வேறு இன மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.   பஞ்சமசாலி சமூகம், குரூப் சமூகம், வால்மீகி சமூகத்தினர், லிங்காயத்துக்கள் எனப் பலரும் தங்களுக்குக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டங்கள் கர்நாடக பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு அளித்தால்  அது 56% ஐ தாண்டி விடும் என கூறப்படுகிறது.   தற்போது கர்நாடக அரசு பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டைத் தவிர 7 பிரிவு இட  ஒதுக்கீட்டை அமலில் வைத்துள்ளது.  இதில் 5 மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கானது.  தவிரத் தலித் மற்றும் பழங்குடியினருக்கு தலா ஒரு  பிரிவு அமலில் உள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு பற்றி வழக்கு ஒன்று நடந்து வருகிறது.  இந்த வழக்கில் இன்னும் எத்தனை காலத்துக்கு இட ஒதுக்கீட்டைத் தொடர மாநிலங்கள் உத்தேசித்துள்ளன எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  அதற்குக் கர்நாடக அரசு அளித்துள்ள பதிலில் மாநிலத்தில் வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்கான இட ஒதுக்கீட்டை 50%க்கு மேல் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக பதில் அளித்துள்ளது.

நேற்று முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்த கர்நாடக அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   இந்த முடிவின் மூலம் கர்நாடக அரசுக்குக் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் நெருக்கடியைச் சமாளிக்க முடியும் எனத் தெரிய வந்துள்ளது.  ஏற்கனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஆதரவாகக் கர்நாடக அரசும் தற்போது இட ஒதுக்கீட்டை 50% க்கு மேல் அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

More articles

Latest article