பெங்களூரு

மாநில சுகாதாரத்துறையால் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நோயாளிகள் கட்டணத்தைக் கர்நாடக அரசு செலுத்த உள்ளது.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.  இவர்களில் சிலரைக் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தது.   அந்த மருத்துவமனைகளில் கட்டணம் மிக அதிகமாக உள்ளதாகவும் இதனால் நோயாளிகளால் கட்டணம் செலுத்த முடியவில்லை எனவும் புகார்கள் எழுந்தன.

இதையொட்டி கர்நாடக மாநில சுகாதாரத்துறையால் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டவர்களின் கட்டணத்தை அரசு செலுத்தும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக் கட்டணங்களையும் அரசு அறிவித்துள்ளது.

அதன்படி பொது வார்டுகளுக்கு   ரூ.5200, அதிக பாதுகாப்பு வார்டுகளுக்கு ரூ.7000, வெண்டிலேட்டர் இல்லாத தனிமை வார்டுகளுக்கு ரூ.8500 மற்றும் வெண்டிலேட்டருடன் உள்ள தனிமை  வார்டுகளுக்கு 10000 கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிசசை பெறுவோருக்கு கட்டணமாக பொது வார்டுகளுக்கு   ரூ.10000, அதிக பாதுகாப்பு வார்டுகளுக்கு ரூ.12000, வெண்டிலேட்டர் இல்லாத தனிமை வார்டுகளுக்கு ரூ.15000 மற்றும் வெண்டிலேட்டருடன் உள்ள தனிமை  வார்டுகளுக்கு 25000 கட்டணம் ஆகும்

ஆனால் இந்த தொகை இன்சூரன்ஸ் பாலிசி உள்ளவர்களுக்கும் மருத்துவமனைகளில் ஊழியர் சிகிச்சைக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கும் பொருந்தாது என தெரிவிக்காட்டுள்ளது.  அத்துடன் சூட்களில் தங்கக் கட்டண நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை.

இந்த உத்தரவின்படி அனைத்து தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கான அனைத்து வித படுக்கைகளில் 50% அரசு அனுப்பும் நோயாளிகளுக்கு அளித்தாக வேண்டும்.  மீதமுள்ள படுக்கைகளை தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்கள் நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.