பெங்களூரு:
கர்நாடக சட்டப் பேரவையில் இன்று மாலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. கடந்த 13 மாதங்கள் நீடித்த குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது
பலத்த இழுபறிக்களுக்கிடையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், 6 வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.
அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.
கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், எந்தவொரு கட்சியும் வெற்றிபெறாத நிலையில், குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வந்தது,.
இடையிடையே சில எம்எல்ஏக்கள், மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் குடைச்சல் கொடுத்து வந்த நிலையில், அவர்களுக்கு பதவி கொடுத்து, அமைதிப்படுத்தி வந்தனர். பாஜகவும் பின்புலத்தில் இருந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த முதல்-மந்திரி குமாரசாமியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்தனர். அத்துடன் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவை விலக்கிக் கொண்டு பாரதிய ஜனதா ஆதரவாளர்களாக மாறினர்.
இதன் காரணமாக மெஜாரிட்டி இழந்த குமாரசாமி அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரியது. கடந்த 18ந்தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், மேலும் 2 நாட்கள் விவாதங்களை நீடிக்க முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்தார்.
ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த நிலையில், இன்று மாலை இறுதியாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது, கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தவறு களை சரிசெய்யும் நேரம் இது. நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி என உருக்கமாக பேசினார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
குரல் வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், குமாரசாமி அரசுக்கு 99 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 105 வாக்குகள் பதிவாகின. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது.