டில்லி:

சாம் தேசிய குடிமக்கள் பதிவுக்கான இறுதிப் பட்டியலை வெளியிட ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து  உச்சநீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது.

குடிமக்கள் பதிவுப் பட்டியல் தொடர்பான வழக்கில், பட்டியலை இறுதி செய்ய 2019ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை ஏற்கனவே உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி உள்ளது.

அசாம் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலை இறுதி செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசு மற்றும் அசாம் அரசு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 19ம் தேதி மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீது  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி ஆர்.எஃப் நாரிமன் அடங்கிய அமர்வு ஜூலை 19ம் தேதி விசாரித்தன. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷர் மேத்தா,  தேசிய குடிமக்கள் பதிவில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் பட்டியலில் பல தவறுகள் நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தேசிய குடிமக்கள் பதிவை இறுதி செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. இது குறித்து ஜூலை 23ம் தேதி விரிவாக விவாதம் நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

அதை தொடர்ந்து இன்று  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,   மத்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசு தரப்பு வாதங்களை அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆகியோர் நீதிபதிகளிடம் எடுத்துரைத்தனர்.

மேலும் அசாம் தேசிய குடிமக்கள் பதிவின் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜீலா தாக்கல் செய்த அறிக்கையும் நீதிபதிகளால் பரிசீலிக்கப்பட்டது. விசாரணை முடிவில் அசாம் தேசிய குடிமக்கள் பதிவின் இறுதி பட்டியலை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து ஆகஸ்ட் 31ம் தேதியை இறுதி நாளாக நீதிபதிகள் அறிவித்தனர்.

அத்துடன்   பட்டியலில் உள்ள 20 சதவீதம் பெயர்களை மீண்டும் சரிபார்க்க அனுமதியளிக்க கோரி மத்திய மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தும் உத்தர விட்டனர்.