பெங்களூரு: அடுத்த ஆண்டு (2022) இறுதி வரை தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்துங்கள் என ஐடி நிறுவனங்களுக்கு கர்நாக மாநில பாஜக அரசு கோரிக்கை கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இதற்கு பல நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஐடி நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தியது. இந்த பணி இன்றுவரை தொடர்ந்து வருகிறது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், ஐடி நிறுவனங்கள் முழுமையாக திறக்க தமிழகம் உள்பட பல மாநில அரசுகள் பச்சைக்கொடி காட்டி உள்ளன. ஆனால், ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள கர்நாடக மாநிலத்தில், மாநில பாஜக அரசு இன்னும் முழுமையான அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில்,  ஐடி நிறுவனங்கள் அடுத்த ஆண்டு இறுதி வரை வீட்டில் இருந்தே பணி புரியும் வசதியை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்று மாநில பாஜக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கூடுதல் முதன்மை செயலாளர் ரமணா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்த்ர்.

அப்போது, , “ பெங்களூருவில் கிருஷ்ணராஜபுரம் சில்க் போர்ட் சாலையில் அடுத்த ஓராண்டுக்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இது இன்னும் ஓராண்டு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளதால்  உள்ள சுமார் 19 கிமீ நீளமுள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த சூழலில்,  ஐடி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால்  அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் நாள் முழுவதும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அரசு சார்பில்  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாக 50 சதவீத நிறுவனங்கள் அரசுக்கு பதில் அனுப்பியுள்ளன. மற்ற நிறுவனங்களும் விரைவில் பதில் தெரிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.