‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்ற பழமொழி கர்நாடக முதல்வர் குமாரசாமி விஷயத்தில் பொய்த்து போகும் வாய்ப்புகளே தென்படுகிறது.
30 சொச்சம் எம்.எல்.ஏ.க்களை மட்டும் பாக்கெட்டில் வைத்திருந்த மதச்சார்பற்ற ஜனதாவின் குமாரசாமி ,காங்கிரஸ் ஆசியுடன் முதல்வராகி விட்டார்.அந்த நாள் முதல் இந்த நாள் வரை அவரை விடாது துரத்துகிறது-கருப்பு.
ஒரு நாள் மட்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்த பா.ஜ.க.வின் எடியூரப்பா ‘தாமரை ஆபரேஷன்-1, ஆபரேஷன் -2 என அடுத்தடுத்து எடுத்த படங்கள் எல்லாம் தோல்வியை தழுவி ,கஜானா காலியாகி போனதால் வீட்டுக்குள முடங்கி கிடக்கிறார் அவர்.
கர்நாடக மக்கள் பொழுது போக்குக்கு என்னதான் செய்வார்கள்?
‘கவலை வேண்டாம்.. நான் இருக்கிறேன் ‘என்று களத்தில் குதித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.சோமசேகர்.
இவர் முன்னாள் முதல்வர் சித்தராமய்யாவின் விசுவாசி.
பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சோமசேகர்,இரு தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பேசும் போது,’’இப்போதும் எங்களுக்கு சித்தராமய்யா தான் முதல்-அமைச்சர்’’ என்று ஐஸ் வைத்ததோடு- குமாரசாமி மீது அனல் கக்கினார்.
‘’இந்த கூட்டணி ஆட்சியில் கடந்த 7 மாதங்களாக பெங்களூருவில் எந்த வளர்ச்சி பணியும் நடக்கவே இல்லை ‘’ என்று கொழுத்திப்போட- குமாரசாமி வெடித்து சிதறி விட்டார்.
‘’காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எல்லை தாண்டி பேசுகிறார்கள்.இது போல் அவர்கள் தொடர்ந்து பேசினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்’’ என்று குமுற –காங்கிரஸ் மேலிடம் ஆடிப்போய் விட்டது.
பா.ஜ.க.வை வீழ்த்த- சிதறி கிடக்கும் துண்டு துணிகளை எல்லாம் திரட்டி –கூட்டணி சட்டையை தைத்து கொண்டிருக்கும் வேளையில்-காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் துடுக்குத்தனமான பேச்சு காங்கிரஸ் மேலிடத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘’சோமசேகருக்கு ஓங்கி குட்டு வையுங்கள்’’என்று டெல்லியில் இருந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவுக்கு ஓலை வர- அவரும் சோமசேகரை அழைத்து கண்டித்துள்ளார்.
‘’தெரியாம பேசிட்டேன்’’ என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்திருக்கிறார் சோமசேகர்.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான அனலில்-குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது பா.ஜ.க.
–பாப்பாங்குளம் பாரதி