பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என கூறிவரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மேகதாது அணை சர்வே பணிகள் தொடர்பாக மேலும் 29 துணை வன அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் தடைபட்டு விடும். காவிரி தண்ணீர் இல்லை என்றால், டெல்டா பாசனம் செயலிழந்து விடும். இதனால், மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கர்நாடக மாநிலத்தில் ஆட்சி செய்யும் மாநில அரசுகள், மேகதாதுவில் அணை கட்டுவோம் என முரண்டு பிடித்து வருகின்றன. இந்த விஷயத்தில், மத்திய அரசின் ஆலோசனை நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல், தமிழ்நாட்டிற்கு விரோதமாகவே கர்நாடக மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது அங்கு ஆட்சி செய்து வரும் மாநில காங்கிரஸ் அரசின் துணை முதல்வராக இருக்கும், நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாது, காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரான மனநிலையில் இருந்து வருகிறார். அதனால், அவர் தொடர்ந்து, மேகதாது அணை கட்டியே தீருவோம் என கூறி வருகிறது. மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை எனவும், இதுகுறித்து தமிழ்நாட்டிற்கு விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவர் தனது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் மேகதாது அணைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்க உத்தரவிட்டு உள்ளார். இதை அம்மாநில முதல்வர் சித்தராமையாயும் ஆமோதித்துள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் தமிழக விரோத நடவடிக்கைக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாதுவில் ஒரு போதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால், தமிழகத்தின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணை கட்டுவதற்காக, எல்லையை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான சர்வே பணிகளை மேற்கொள்ளவும், 29 துணை வன அதிகாரிகளை கர்நாடக அரசு நியமனம் செய்துள்ளது. அவர்கள் சாம்ராஜ்நகர் சதுக்கத்தின் தலைமை வன காப்பாளர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 4-ம் தேதி நடைபெற்ற மேகதாது அணை தொடர்பான கர்நாடக மாநில அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் மேகதாது அணைக்கான எல்லையை அடை யாளம் காண அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவில் வறட்சியை சமாளிக்கவும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்காகவும் இந்த அணை அவசியம் என கர்நாடக அரசு தனது விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தது. 9 ஆயிரம் கோடி செலவில் 400 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணையைக் கட்ட விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கும் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசு ஏற்கனவே இதுதொடர்பான அறிக்யை சுற்றுச்சூழல் துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பம் அனுப்பி உள்ளது. அதில், மேகதாத அணை கட்டப்படுவதால் முழுமையாக நீரில் மூழ்கும் 5கிராம மக்களுக்கு வேறு வாழ்விடம் அளிக்கப்படும் என்றும், மேகதாது அணையைக் கட்டுவதற்கு 5252 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதில் 4996ஹெக்டேர் நிலம் நீருக்குள் மூழ்கும். இதில் 3181 ஹெக்டேர் நிலம் காவிரி வன உயிர் சரணாலயத்திற்கு உட்பட்டது. 1869ஹெக்டேர் நிலம் காப்புக் காடுகள் ஆகும்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மேகதாதுவிற்கு நேரில் சென்று அங்கு கட்டுமானப் பணிகளுக்கான கற்கள் கொட்டப்பட்டிருப்பதை பார்த்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் மத்தியஅரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலின்றியும், வன பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படி எந்த அனுமதியும் பெறாத நிலையில் அணை கட்டும் பகுதியில் கட்டுமான பொருட்களை கர்நாடக அரசு குவித்துள்ளதாக அண்மையில் பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த செய்தி அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்தது. அதைத்தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் பணிகள் நடைபெறுகிறதா என்பதையும், அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மூத்த அதிகாரி, காவிரி நீர் மேலாண்மை ஆணைய மூத்த அதிகாரி, கர்நாடக அரசு நீர்வளத்துறை மூத்த அதிகாரி, வனத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.