பெங்களூரு
கர்நாடக முதல்வர் சமீபத்தில் பாஜக கூட்டத்தில் முந்தைய ஆட்சி கலைப்பு குறித்துப் பேசியதை அடுத்து அம்மாநில ஆளுநரிடம் ஆட்சியைக் கலைக்கக் கோரி காங்கிரஸ் மனு அளித்துள்ளது.
கடந்த மாதம் 27 ஆம் தேதி ஹூப்பள்ளி நகரில் கர்நாடக பாஜகவின் உயர் நிலைக்குழு கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடை பெற்றது. எடியூரப்பா இக்கூட்டத்தில் பேசுகையில், “கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், மஜத 17 சட்டப்பேரவை உறுப்பினர்களால் தான் பாஜக அரசு அமைந்துள்ளது. கர்நாடகாவில் எனது தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அந்த 17 உறுப்பினர்களும் அவர்கள் கட்சி எதிர்ப்பையும் மீறி, குடும்பத்தை விட்டு மும்பையில் மாதக்கணக்கில் தங்கி இருந்தார்கள். இந்த விவகாரத்தை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நேரடியாகக் கையாண்டார்.
அதே வேளையில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இன்றுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. நம்மை நம்பி மோசம் போன 17 உறுப்பினர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் யாரும் பேசவில்லை. அதை விடுத்து தினமும் அவர்களை விமர்சித்துப் பேசி வருகின்றனர். என்னால் இந்த உறுப்பினர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியவில்லை. என்பதால் கட்சி மேலிடம்தான் ஏதாவது செய்ய வேண்டும். நாம் இவர்களை இடைத் தேர்தலில் வெற்றிபெற வைத்து, உரிய கவுரவம் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
எடியூரப்பா பேசிய வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் பாஜக அமைச்சர்களும், தலைவர்களும் எடியூரப்பாவின் இந்தப் பேச்சால் அதிருப்தி அடைந்துள்ளனர். எடியூரப்பா கட்சி மேலிடத்தைப் பகிரங்கமாக விமர்சித்தது குறித்து இவர்கள் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா ஆகியோர் நேற்று முன்தினம் ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், “அமித்ஷா மற்றும் எடியூரப்பா உள்ளிட்டோர் காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 17 உறுப்பினர்களைத் தூண்டிவிட்டு முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்ததாக எடியூரப்பா தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார். இத்தகைய அப்பட்டமான ஜனநாயக படுகொலையைச் செய்த எடியூரப்பா தலைமையிலான அரசை உடனடியாக கலைக்க குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.