ர்சிங்கபுரா, அரியானா

நேற்று மாலை அரியானா மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டும் மரணம் அடைந்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் கர்னல் மாவட்டம், அர்சிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 5 வயது சிறுமி ஷிவானி. ஷிவானியின் வீட்டின் அருகே உள்ள பகுதியில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டு, மூடப்படாமல் இருந்தது.  நேற்று மாலை ஷிவானி கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாததால் சந்தேகமடைந்த ஷிவானியின் தாய் அங்கு வந்து தேடினார்., அந்தப் பகுதியில் மூடாமல் இருந்த ஆழ்துளைக் கிணறு பகுதியில் இருந்து சிறுமி ஷிவானியின் சத்தம் வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த தாய் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து, ஷிவானியை மீட்க முயன்றும் மீட்க முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை, காவல்துறையினர், மருத்துவக் குழுவுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி உடனடியாக அங்கு வந்த தீயணைப்புப் படையினர்,காவல்துறையினர், மாவட்ட அதிகாரிகள் சிறுமியை மீட்கும் பணியில் இறங்கினர்.

சிறுமிக்கு டியூப் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு அதன்பின் ஒரு சிறிய டேப் ரெக்கார்டரில் சிறுமியின் தாய், தந்தை பேசும் குரலைப் பதிவு செய்து அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஒலிக்கவிடப்பட்டது. முதலில் 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமி. தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது திடீரென சறுக்கி 50 அடி ஆழத்துக்குச் சென்றார்.

உடனடியாக பேரிடர் மீட்புப் பணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்தனர்.  ஷிவானி சிக்கியுள்ள குழிக்கு அருகே மற்றொரு குழியை மண்தோண்டும் இயந்திரம் மூலம் தோண்டினர். இந்தக் குழி தோண்டும் பணி 10 மணிநேரம் வரை நடந்தது.  அதே நேரத்தில் குழிக்குள் இருக்கும் சிறுமி மயக்கமடையாமல் இருக்க, தேவையான ஆக்சிஜனும், சிறுமியின் தந்தை, தாய் பேசும் ஒலிநாடாக்களை அவ்வப்போது ஒலிக்கவிட்டும் அவருக்குத் தைரியமும் ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது.

குழிக்குள் சிறிய கேமராவும் விளக்கு வெளிச்சமும் அளிக்கப்பட்டு அவ்வப்போது சிறுமியின் செயல்பாட்டை, சிறிய கேமரா மூலம் வெளியிலிருந்து கண்காணிக்கப்பட்டது.  சுமார் 10 மணிநேரத்துக்குப் பின், 50 அடி ஆழம் சென்றபின், பக்கவாட்டில் குழி அமைத்து, அந்தச் சிறுமியைப் பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். அந்தச் சிறுமியை உடனடியாக அங்கு இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி உயிரிழந்தார்.

சமீபத்தில் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் கடந்த மாதம் 25-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயதுக் குழந்தை சுஜித் 4 நாட்கள் போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார்.  அந்த சோகம் மறைவதற்குள்  மற்றொரு ஆழ்துளைக் கிணறு பலி நடந்தது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.