பெங்களுரூ:
ர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மருத்துவமனையில் இருந்தபடியே கோப்புகளைப் பார்த்து எடியூரப்பா கையெழுத்திட்டு வந்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொலைபேசியில் உரையாற்றி அரசு அலுவல் வேலைகளை கவனித்து வந்தார். உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை அடுத்து, அவருக்கு இன்று இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து ஓரிரு தினங்களில் வீடு திரும்புவதாக கூறப்பட்ட நிலையில், மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களில் நான் குணமாகிவிட்டேன். மருத்துவரின் ஆலோசனையின்படி நான் சில நாள்கள் தனிமைப்படுத்தலில் இருப்பேன். நம்பிக்கையுடன் இருந்தால் மருத்துவ சிகிச்சையுடன் கொரோனாவை வெல்ல முடியும். கவலைப்பட வேண்டாம். கவனமாக இருங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.