என்னை சந்திக்க வருவோர் செல்போன் கொண்டுவரக்கூடாது: எடியூரப்பா புதிய உத்தரவு

Must read

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தின் எதிரொலியாக தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பாக சமீபத்தில் உப்பள்ளியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய பேச்சு அடங்கிய ஆடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள எடியூரப்பாவின் கருத்துகளை தீர்ப்பின் போது கவனத்தில் கொள்வதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த ஆடியோ விவகாரத்தால் எடியூரப்பா பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளார். எடியூரப்பாவின் பேச்சை பதிவு செய்து, ஆடியோவை வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடிக்க பாஜக உட்கட்சி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தன்னை சந்திக்க வருபவர்கள், செல்போன் கொண்டுவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள எடியூரப்பா, ஜே.பி நகரில் உள்ள தனது வீடு, தான் புதிதாக குடியேற உள்ள காவேரி வீடு உள்ளிட்ட பகுதிகளில் செல்போன்களின் சிக்னல்களை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவிகளை பொருத்தவும் அரசு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், செல்போன் கொண்டு வருபவர்களை எக்காரணம் கொண்டும் தன்னை சந்திக்க அனுமதிக்கக்கூடாது என்று காவல்துறையினருக்கு எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோது, ராய்ச்சூரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவின் மகனுடன், எடியூரப்பா பேரம் நடத்தியதாக கூறப்படும் ஆடியோ உரையாடல் பதிவு வெளியாகி, பாஜகவுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article