கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் கே எஸ் ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

2012 முதல் 2013 ம் ஆண்டு வரை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வராக பதவி வகித்தவர் கே.எஸ். ஈஸ்வரப்பா.

2018 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஷிமோகா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

2023 மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தரப்பில் இருந்து இதுவரை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் குஜராத்தில் அறிவிக்கப்பட்டது போல் 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று பாஜக அறிவித்திருந்தது.

ஜூன் மாதம் 75 வயதை எட்டிப்பிடிக்கும் ஈஸ்வரப்பா-வுக்கு டிக்கெட் கிடைப்பது சாத்தியம் இல்லை என்று கூறப்பட்டதை அடுத்து அதிருப்தியில் இருந்த அவர் தேர்தல் அரசியலுக்கு முழுக்குப் போடப்போவதாக இன்று அறிவித்துள்ளார்.

இதே காரணத்தைக் கூறி முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கும் டிக்கெட் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்பதால் கர்நாடக பாஜக-வில் குழப்பம் நிலவி வருகிறது.