பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி என சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கர்நாடக சட்டமன்றத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் 113 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்க முடியும். தேர்தல் களத்தை பொறுத்த வரை காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக அமைந்துள்ளது. ஏப்ரல் – மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு என ஏற்கனவே வெளியான கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள லோக் போல் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்பது தெரிய வந்துள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏற்கனவே காங்கிரஸ், பாஜக, மதஜ கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. தற்போது மாநிலத்தை ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காய் நகர்த்தி வருகிறது. ஆனால், பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முயன்று வருகின்றன. தற்போதைய நிலையில், அங்கு 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், லோக் போல் என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஜனவரி 15 முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 30 வாக்குச் சாவடிகளில் லோக்பால் அமைப்பு மாதிரி வாக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி 116-122 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 39% முதல் 42% வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்க கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
ஆளும் கட்சியான பாஜகவுக்கு 77-83 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், குமாரசாமியின் மஜகவுக்கு 21-27 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்ற அதிர்ச்சி தகவல்களையும் தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நடத்திய கருத்துக்கணிப்பில், பாஜக 60 முதல் 80 தொகுதிகள் வரை வெற்றி பெறக்கூடும். காங்கிரஸ் 80 முதல் 90 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களில் வெல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் காங்கிரஸ் கட்சி 120 இடங்களை கூட தாண்டலாம். ஆனால் பாஜகவிற்கு மட்டும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை பொறுத்தவரை தனிப் பெரும்பான்மை என்பது எட்டாக் கனியாகவே காணப்படுகிறது.
கர்நாடக மாநில பாஜகவில், மூத்த தலைவர்களிடையே ஏற்றுபட்டுள்ள ஒற்றுமையின்மை மற்றும் உட்கட்சி பூசல் நிலவி வருவதால், இந்த முறை ஆட்சியை கைப்பற்றுவது சாத்தியமில்லை என்றும், அரசு டெண்டர்களில் ஊழல், ஹிஜாப் சர்ச்சை, மதமாற்ற தடைச் சட்டம், பெங்களூரு நகர உள்கட்டமைப்பு வசதிகளில் குளறுபடிகள் போன்ற காரணங்களால் பாஜக ஆட்சியை இழக்கும் என்றே கூறப்படுகிறது.