தமிழரை தாக்கியவர்களை கைது செய்! கர்நாடகாவுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!!

Must read

சென்னை:

காவிரி பிரச்சினை குறித்து முகநூலில் பதவிட்ட தமிழக இளைஞரை கன்னட வெறியர்கள் தாக்கியது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். தாக்கிய கன்னட வெறியர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயம் குறித்து முகநூலில் கருத்து தெரிவித்ததற்காக தமிழ் இளைஞர் ஒருவர் பெங்களூருவில் கன்னட வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த கொலை வெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
பெங்களூரு, மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், தமிழகமும், தமிழர்களும் அமைதி காத்து வந்தனர்.
அடுத்தகட்டமாக தமிழர்கள் மீதான நேரடித் தாக்குதலை கன்னட வெறியர் கள் தொடங்கியுள்ளனர்.
1kannand
பெங்களூரு கிரி நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் உள்ள நடிகர் – நடிகைகள் போராடாமல் இருப்பது குறித்தும், கர்நாடகத்தின் பக்கம் நியாயம் இல்லாத நிலையிலும் கன்னட நடிகர் நடிகைகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருவது குறித்தும் அவரது முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.
இதைப் பார்த்த கன்னட வெறியர்கள் கும்பலாகச் சென்று சந்தோஷை அவரது வீட்டிலிருந்து கடத்தி வந்து பொது இடத்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
அத்துடன் நிற்காமல் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்கும்படியும், கர்நாடகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும்படியும் கட்டாயப்படுத்தி, அதன்படி அவர் மன்னிப்பு கேட்கும் காட்சிகளை காணொலியாக பதிவு செய்தும் வெளியிட்டிருக்கின்றனர்.
அந்த காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவுகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் மீது கர்நாடக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் போது கன்னடர்களின் உடமைக்கோ, உயிருக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களின் போது தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதும், தமிழர்கள் தாக்கப்படுவதும் நியாய மற்றவை. மனித நேயத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரான இச்செயல்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது.
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரிப் பிரச்சினை தவிர வேறு எந்த மோதலும் கிடையாது. காவிரிப் பிரச்சினை தவிர்த்த மற்ற வி‌ஷயங்களில் இரு மாநில மக்களும் சகோதர,சகோதரிகளாகவே பழகி வருகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒரு மாநிலம் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டால், அடுத்த நிமிடமே இன்னொரு மாநிலம் உதவிக்கரம் நீட்டுவது தான் இதற்கு உதாரணமாகும்.
இந்த நட்பை சிதைக்கும் வகையில் சில வெறியர்கள் நடத்தும் வன்முறைகளை கர்நாடக அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. கர்நாடகத்தில் தமிழர்கள் வாழ்வதைப் போலவே, தமிழகத்திலும் கன்னட மக்கள் வாழ்கின்றனர்.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் பட்சத்தில், தமிழர்களும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என எதிர் வன்முறையில் இறங்கினால் அது இரு மாநிலங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை சிதைப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கே ஊறு விளைவிக்கும் என்பதை கர்நாடக அரசும், வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் அமைப்புகளும் உணர வேண்டும்.
தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு வலுத்த பாதுகாப்பு வழங்கும்படியும் கர்நாடக அரசை மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு  கூறியுள்ளார்.

More articles

Latest article