பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர் உள்பட கர்நாடகாவின் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டில், 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி வகித்த காலத்தில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்று வந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். குறிப்பாக கர்நாடக நீர்பாசனத்துறை திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், அதன் மூலம்,எடியூரப்பாவின் உதவியாளர் உமேஷ் என் கோடிக்கணக்கில் கையூட்டு பெற்று, ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த முறைகேட்டில், எடியூரப்பாவின் மகன்களுக்கும் பங்கு இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், எடியூரப்பாவுக்கு நெருக்கமானவரான உமேஷ் வீடு உள்பட ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள், ஆடிட்டர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி சோதனையில், பல நூறு கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.