பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ஆடும் ஒரு வீரர், தனது கையில் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கையுறையை அணிந்திருந்தது தற்போது செய்தியாகியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஷெர்ஃபேன் ரூதர்போர்டு என்ற அந்த கிரிக்கெட் வீரர், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றவர். ஆனால், அமீரக நாட்டில் நடைபெற்ற தொடரில், அவருக்கு, மும்பை அணியின் சார்பில் ஒரு போட்டியில்கூட வாய்ப்பளிக்கப்படவில்லை.

இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கராச்சி கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். இந்நிலையில், அமீரகத்திலிருந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்காக, நேரடியாக கராச்சிக்கு சென்றார் ரூதர்போர்டு. ஆனால், மும்பை அணியின் ஜெர்சியை அவர் கராச்சி விமான நிலையத்தில் இறங்கும்போது அணிந்திருந்தது அப்போது செய்தியானது.

ஆனால், பிரச்சினை அத்துடன் முடியவில்லை. கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடும் அவர், பாகிஸ்தான் சூப்பர் லீக் தகுதிபெறும் முதல் ஆட்டத்தில், கராச்சி தேசிய விளையாட்டு மைதானத்தில் ஆடினார்.

அப்போது, வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில், தனது அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அவரின் கையில் இருந்ததோ, ஐபிஎல் மும்பை அணியின் கையுறை. இது, மீண்டும் சர்ச்சை ஆனது.

இந்நிலையில், தனது வீரருக்கு, அடிப்படையான கிரிக்கெட் கிட் கூட தர இயலாத நிலையில் உள்ளதா கராச்சி கிங்ஸ் அணி? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.