டில்லி

காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் இனி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் வரையில் அவர் விசாரிக்கும் வழக்குகளில் வாதிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க்கட்சிகள் இணைந்து புகார் மனு ஒன்றை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவிடம் அளித்தது.   அந்த மனுவில் அவரை  பதவி நீக்கம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.    இது குறித்து வெங்கையா நாயுடு பல சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது

இன்று வெங்கையா நாயுடு இந்த மனுவை ஏற்க மறுத்து விட்டார்.   புகாரில் காணப்பட்ட குற்றங்கள் பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு வலுவானது அல்ல என காரணம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இது எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  அவர், “துணை ஜனாதிபதியின் இந்த தீர்ப்பு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது.   இனி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் வரையில் அவர்  விசாரித்து வரும் எந்த ஒரு வழக்கிலும் நான் வாதிடப் போவதில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.